சேலம்-சென்னை 8 வழி சாலை : அதிக இழப்பீடு வழங்க உத்தரவு : கலெக்டர் ரோகிணி..!
சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு நிலம் வழங்கிய 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி இன்று வழங்கினார். அதே இடத்தில் தமிழக அரசின் சார்பில் பசுமை வீடுகள் கட்டி தரப்படும் என்றும் அவர் பயனாளிகளிடம் உறுதியளித்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழி சாலை அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பாதிப்பில்லாமல் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிலத்தில் மரங்கள், வீடுகள், மாட்டுக் கொட்டகைகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இருந்தால் அதற்கேற்றவாறு இழப்பீடு வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் பசுமை வழி சாலை 36.3 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 186 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 46 ஹெக்டேர் அரசு நிலமாகும். இதுவரை 18 கிலோ மீட்டர் தூரம் நில அளவீடு பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்த பணி விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில், மொத்தம் 853 நிலப்பட்டாதாரர்கள் உள்ளனர். ஒருசிலர் அதிக இழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு 21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி வரை இழப்பீடு வழங்க வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் நிலம் வழங்கியவர்களுக்கு, அதிக இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். அடிப்படை சந்தை மதிப்பில் நகர்ப்புறங்களில், குறைந்தபட்சம் 2 மடங்கும், அதிகபட்சம் 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு தென்னை மரத்திற்கு 50,000 இழப்பீடு வழங்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.