சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு! போராட்டம் வெடிக்கும் உளவுத்துறை எச்சரிக்கை..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து இனி நடக்கப்போகும் எந்த போராட்டங்களாக இருந்தாலும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று உளவு துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சேலம்-சென்னை இடையே 277 கி.மீ. தூரத்துக்கு பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக 150-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பசுமை வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள 5 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புகார் மனுக்களையும் அளித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி திரண்டு சென்ற 10 ஆயிரம் பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் உளவு பிரிவு போலீசார் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தூத்துக்குடியில் நடைபெற்றது போன்று இந்த 5 மாவட்டங்களிலும் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரிலேயே உளவு பிரிவினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடுபவர்கள் யார்-யார்? என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பசுமை வழி சாலை திட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் அமைப்புகள் எவை? என்பது பற்றிய பட்டியலை தயாரித்து வைத்துள்ள போலீசார் அந்த அமைப்புகளின் முன்னணி நிர்வாகிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.