சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை : நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது..!
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது.
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் இந்த பணி நடைபெற்று வந்தது. வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 10-வது நாளாக, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, இருளப்பட்டி பகுதியில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்ய வந்தனர். அப்போது சந்திரகுமார் என்பவரது விவசாய நிலத்தில் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் வருவாய்த்துறையினர் சென்றனர்.
இதையறிந்த சந்திரகுமார் தனக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, குடும்பத்தினருடன் ‘தீக்குளிப்பேன்’ என எச்சரிக்கை விடுத்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மனோகரன், வேலவன் உள்ளிட்ட 14 பேர் கைகளில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களுடன் நின்று தங்கள் நிலத்தை அளவீடு செய்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் அருகில் இருந்த விவசாய நிலங்களில் அளவீடு பணிகளை தொடர்ந்து நடத்தினர்.
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலைக்காக சேலம் மாவட்டத்திலும் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது. 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக நேற்று 4-வது நாளாக சேலம் அருகே குள்ளம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.
குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கி மின்னாம்பள்ளி அய்யனாரப்பன் கோவில் அருகே நடைபெற்றபோது தாசில்தார் அன்புக்கரசியை பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலம் அளவீடு செய்தபோது குப்புசாமி என்பவருடைய மனைவி தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள கிழங்கு செடியை பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். அவரை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.
தொடர்ந்து அயோத்தியாப்பட்டணம், ஏரிக்காடு, மாசிநாயக்கன்பட்டி சக்திநகர், வரகம்பாடி, உடையாப்பட்டி வரை நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
அயோத்தியாபட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் நேற்று பசுமை சாலை பணிக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் பகுதியில் அளவீடு செய்து முட்டுக்கல் நடப்பட்டது. இதை அறிந்த ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
பள்ளிக்கூடமும், மாரியம்மன் கோவிலும் இடிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் ராமலிங்கபுரத்தில் வசிக்கும் கிராமமக்கள் சோகம் அடைந்துள்ளனர். கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள், கல்வியாளர்கள் மாரியம்மன் கோவிலையும், பள்ளிக்கூடத்தையும் விட்டுவிட்டு வேறு வழியில் நிலத்தை அளவீடு செய்து சாலையை கொண்டு செல்லுங்கள் என்று கூறினர்.
மாரியம்மன் கோவில் இடிக்கப்படுவதாக அறிந்த தனம் என்ற பெண் அங்கு வந்தார். அப்போது, அதிகாரிகள் முன்னிலையில் அவர் திடீரென அருள் வந்து சாமியாட தொடங்கினார். ‘என்னையா நீங்க எடுக்குறீங்க. நீங்க அனுபவிப்பீங்கடா. என்னை அழித்தால் நீங்க அழிந்து விடுவீர்கள். மக்களின் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறியதால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமலிங்கபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கடந்த 2014-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.1 லட்சம் நிதி உதவியும், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி ரூ.3 லட்சமும் நிதி உதவியும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.