சேலம் காஞ்சி சங்கரமடத்தின் மீது தாக்குதல்!
சேலம் காஞ்சி சங்கரமடத்தின் மீது பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், விஷ்வ ஹிந்து பரிஷத் ரதயாத்திரையை கண்டித்தும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நிலைத்தகவல் தனது அனுமதி இல்லாமல் அட்மினால் போடப்பட்டது என்று விளக்கமளித்ததோடு அந்த சம்பவத்திற்கு ஹெச்.ராஜா மன்னிப்பும் கோரினார்.
எனினும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நள்ளிரவில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியில் உள்ள காஞ்சி சங்கரமடம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சங்கரமடத்தின் நுழைவு வாயிலில் உள்ள மின் விளக்குகளை உடைத்தும், பதாககைகளை கிழித்தெறிந்தும் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரமடத்தின் நுழைவு வாயிலில் உள்ள மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக சேலம் நங்கவள்ளி பகுதியைச் சார்ந்த, கிருஷ்ணன், ராஜேந்திரன், மனோஜ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து
அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.