செல்போன் மூலம் சென்னையில் பல்மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது!
பல் மருத்துவர்களை சென்னையில் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கானாத்தூரைச் சேர்ந்த ஹரீஷ் மற்றும் அவரது மனைவி வைஷாலி ஆகிய இருவருமே பல் மருத்துவர்கள். இவர்கள் சோழிங்க நல்லூரில் பல் மருத்துவமனை வைத்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி ஹரீஷை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒரு லட்சம் ரூபாய் பணம் தருமாறும் இல்லாவிட்டால் அவரது மனைவி அல்லது மகளைக் கொன்று விடுவதாக மிரட்டினான்.
ஏற்கனவே பல்வேறு மருத்துவர்களை மிரட்டி பணம் பெற்றதாகவும், ஹரீஷின் மருத்துவமனைக்கு அருகிலும் வீட்டுக்கு அருகிலும் தங்களது ஆட்கள் நிற்பதாகவும் மர்மநபர் மிரட்டிய ஆடியோ வாட்ஸ் அப் மூலம் பரவியது. மிரட்டலையடுத்து ஹரீஷ் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு புகார் பெற்ற தனிப்படை போலீசார், மிரட்டிய நபரின் செல்ஃபோன் எண்ணைக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் புலனாய்வு மேற்கொண்டனர்.
அப்போது டாக்டர் ஹரீசை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டியது, குரோம்பேட்டையை சேர்ந்த கார் மெக்கானிக் பாலாஜி என்பது தெரியவந்தது. விசாரணையில், முருகன் என்பவருடன் சேர்ந்து, மெக்கானிக் பாலாஜி, 25க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணம் பறிப்பதற்காக மிரட்டியது தெரியவந்தது.
2 பேரும் சொகுசாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல் மருத்துவர்களை மட்டும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வந்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்தது போல் அவர்களால் பணத்தைப் பெற முடியவில்லை. ஒரே ஒரு மருத்துவரிடம் மட்டும் 50 ஆயிரம் ரூபாயை இவர்கள் மிரட்டிப் பறித்ததாக கூறப்படுகிறது. பிஏ கிரிமினாலஜி படித்துள்ள முருகன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சட்டப் படிப்புக்காக சிட்லப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டும் வந்துள்ளார். அதனால் செல்போன் மூலம் போலீசார் விசாரித்து பிடித்து விடக்கூடாது என்பதற்காக, தவறான முகவரி கொண்ட சிம்கார்டுகளை பயன்படுத்தியுள்ளார்.
அதற்காக, தெருவோரம் குடை அமைத்து சிம்கார்டு விற்கும் நபர்கள் மூலம் எந்தவித அடையாள சான்றும் இன்றி வெறும் 500 ரூபாய்க்கு இது போன்ற சிம்கார்டுகளை வாங்கி இருக்கின்றனர். முறையான அடையாள சான்றுடன் சிம்கார்டு வாங்க வருபவர்களுக்கு தெரியாமலேயே, அவர்களுடைய கைரேகை, ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டுகள் விற்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்பு தனது செல்போனில் முருகன் அவரது பெயரில் உள்ள சிம்கார்டை பயன்படுத்தி இருக்கிறார். அந்த செல்போனின் இஎம்ஐ எண் மூலம் தற்போது அவர் போலீசாரிடம் சிக்கி இருக்கிறார். கானத்தூர் உதவி ஆய்வாளர் தமிழ் அன்பன் தலைமையிலான தனிப்படையினர் 15 நாட்களுக்கு மேல் தீவிர விசாரணை வேட்டை நடத்தி முருகன், பாலாஜி ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.