செய்தியாளரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுத்திடுக: காவல்துறை துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு …!
தீக்கதிர் செய்தியாளரைத் தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி வட்ட காவல்துறை துணைத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தீக்கதிர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் குமார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த மே 22-ஆம் தேதி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் தடியடி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கடந்த மே 25-ஆம் தேதி தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் குமார் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தார்.
அப்போது திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாருடன் டிஎன் 72 ஜி-1365 என்ற வாகனத்தில் ரோந்து வந்த காவலர்கள், செய்தியாளர் குமாரை தாக்கி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி, காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர். காவல் கண்காணிப்பாளர், குமார் வைத்திருந்த செல்போனைப் பறித்து அதில் பதிவாகியிருந்த புகைப்படங்களை அழித்துவிட்டு ” திரும்பிப் பார்க்காமல் போய்யா” எனக் கூறி செல்போனை கொடுத்துள்ளார்.
இந்தநிலையில், செய்தியாளர் என்று தெரிந்தும் உயர் அதிகாரி முன்னிலையில் என்னை அசிங்கமாகப் பேசி தம்மை தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார், காவல்துறை துணைத்தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மேலும் தமது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.