இந்நிலையில் நேற்று முன்தினம் கேளம்பாக்கத்துக்கு மாதவன் வந்துள்ளார். அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு மது போதையுடன் இரவில் உணவருந்தச் சென்றுள்ளார். அங்கு, சைவ உணவு ஆர்டர் செய்ததாகவும். ஆனால், அசைவ உணவை ஊழியர் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த வழக்கறிஞர் ஹோட்டலின் மேலாளர் சங்கரலிங்கத்திடம் புகார் செய்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் மாதவனை, மேலாளர் சமாதானப்படுத்தியுள்ளார். எனினும், அந்த ஊழியரைத் தன் கண் முன்னே தண்டிக்கும்படி கூறி, வாக்குவாதத்தில் மாதவன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலாளர் மறுப்பு தெரிவிக்கவே, அந்த ஊழியரை மாதவன் தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற மேலாளரையும் தாக்கியுள்ளதோடு தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேலாளர் கூச்சலிடவே, ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் மாதவனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, மாதவன், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஊழியர்களை நோக்கி சுட்டுள்ளார். இதில் குறிதவறி வெளியே நின்றிருந்த காரின் கண்ணாடி மீது குண்டு பாய்ந்து, கண்ணாடி சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து மாதவனைப் பிடித்துள்ளனர். போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீஸார், வழக்கறிஞர் மாதவனைக் கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் மாதவன் மீது,ஹோட்டல் மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில், ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கொலை முயற்சி, காயப்படுத்துதல், அசிங்கமாகப் பேசி தாக்குதல் நடத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் 49 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 50 குண்டுகளை துப்பாக்கியில் நிரப்பி வைத்திருந்தார். எனினும், ஒருமுறை மட்டுமே ஊழியர்களை நோக்கிச் சுட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக்கு முறையான ஆவணங்கள் வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட மாதவனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.