சென்னை மாதவரத்தில் வழிகாட்டி பலகைகளில் விளம்பரங்கள்-வாகன ஓட்டிகள் அவதி…!!
சென்னை மாதவரத்தில் வழிகாட்டி பலகைகள் மீது விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் கடக்கும் முக்கிய சந்திப்பு மாதவரம். இங்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபார ரீதியாக, நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் வெளி மாநில வாகனங்களுக்கு ஏதுவாக, மாநகராட்சி மூலம் தமிழக அரசு ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளது. அவற்றின் மீது அங்குள்ள சமூக விரோதிகள் சிலர் விளம்பரங்களை ஒட்டி மறைத்தும், சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சேதமடைந்த வழிகாட்டி பலகைகளை தமிழக அரசு புதுப்பிக்க வேண்டும் என்றும் பலகைகள் மீது விளம்பரங்களை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.