சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை : கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!

Default Image
சென்னை-சேலம் இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது.
புதிய சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
என்றாலும் சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணியை வருவாய் துறையினர் மும்முரமாக மேற்கொண்டு உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நிலத்தை அளவிடும் பணியை வருவாய் துறையினர் தொடங்கி உள்ளனர்.
விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருந்த போதிலும், பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது.
இந்த பசுமைவழி சாலை திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் சென்னை- சேலம் பசுமை வழி நெடுஞ்சாலை உள்பட 8 பசுமை வழி நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னை-மதுரை, சென்னை- பெங்களூரு 4 வழிச்சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது.
சென்னை-மதுரை 4 வழிச்சாலையில் உளுந்தூர்பேட்டை வரை மிக அதிக அளவில் வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த சாலையின் வாகன கொள்திறன் 40 ஆயிரம் கார்கள் (பி.சி.யு.) ஆகும். ஆனால் தற்போது இந்த கொள்திறன் 80 ஆயிரம் கார்களாக உள்ளது.
சென்னையில் இருந்து மதுரை மற்றும் அதற்கு தெற்கே பயணிக்கும் வாகனங்களைவிட சேலம், கோவை உள்ளிட்ட தென்மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் வாகனங்களே அதிகம்.
இதை கருத்தில்கொண்டும், எதிர்கால தேவையை கருதியும் உருவாக்கப்பட்டதுதான் சென்னை-சேலம் 8 வழி பசுமை நெடுஞ்சாலை திட்டம். இந்த சாலை சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியில் வெளிவட்ட சாலையில் இருந்து தொடங்கும். இந்த திட்டம் குறித்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலம் 350 முதல் 400 ஹெக்டேர்தான்.
விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு பதிலாக பறக் கும் சாலை அமைக்கலாமே என்று சிலர் கூறுகிறார்கள். பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என்றால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு ரூ.50 கோடி இருக்க வேண்டும்.
ஆனால் இந்த திட்டத்தில், பொதுமக்கள் எதிர்க்கும் பகுதியில் நில மதிப்பு மிகவும் குறைவு. தாம்பரம், செங்கல்பட்டு பகுதியில்கூட நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு ரூ.30 கோடிதான். எனவேதான் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்படவில்லை.
நிலத்தை இழக்கும் பொதுமக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது நிலத்தின் சந்தை மதிப்புக்கு மேல் 4 மடங்கு தொகை இழப்பீடாக வழங்கப்படும். அது மட்டுமின்றி வீடுகளை இழப்பவர்களுக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வழங்கப்படும். அத்துடன் அவர்களுடைய கட்டிடத்தின் சதுர அடியை கணக்கிட்டு ஒரு சதுர அடிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் கையகப்படுத்தப்படும் நிலத்தில் பள்ளிக்கூடங் கள், கோவில்கள், சமுதாய நலக்கூடங்கள் இருந்தால், அவை வேறு இடத்தில் புதிதாக கட்டி முடிக்கப்படும். அப்படி புதிய கட்டிடங்கள் கட்டிய பின்னரே ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும். எனவே இந்த விஷயத்தில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
இந்த பசுமைவழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் ஓர் ஆண்டுக்கு 6 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சம் ஆகும். மேலும், சென்னை- சேலம் இடையேயான பயண தூரம் 60 கி.மீ. குறையும். பயண நேரமும் குறையும். எனவே, பொதுமக்கள் இந்த சாலைப்பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் இல்லை.
இந்த திட்டத்துக்காக தேவைப்படும் நிலத்தை அளவிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் வரைவு செயல் திட்ட அறிக்கை தயாரித்து முடிக்கப்படும். அதன்பிறகு கருத்துக்கேட்பு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்திய பிறகே திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk