6 மாதத்திற்கு சென்னையில் முன்பு 15 வயது சிறுவனை அடித்து கொலை செய்து சுடுகாட்டில் புதைத்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலையை செய்துவிட்டு மறைத்த சிறுவர்கள் தாமாக முன்வந்து சரணடைந்த பின்னணி என்ன?
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெருமாள் – கெங்கம்மாள் தம்பதியின் மகன் 15 வயதான சிறுவன் ராஜேஷ். செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தும், வேலை பார்க்கும் இடம் சூளைமேடு என்பதால் அதே பகுதியில் நடைபாதையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி முதல் சிறுவன் ராஜேஷை காணவில்லை. ஒரு வாரம் உறவினர் வீடுகளில் தேடிய சிறுவனின் பெற்றோர் சூளைமேடு காவல் நிலையத்தில் ஜனவரி 21-ம் தேதி புகார் கொடுத்தனர்.
கடந்த 6 மாத காலமாக ராஜேஷ் மாயமானது குறித்து எந்த தகவலும் தெரியாததால் அவரது பெற்றோர் தினமும் காவல் நிலையம் சென்று விசாரித்து வந்துள்ளனர். பெற்றோரும், உறவினரும் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் 17 வயது சிறுவர்கள் இரண்டு பேரும், 19 வயதான பரத்குமார் என்ற இளைஞனும் சரணடைந்தனர். மாயமானதாக கூறப்பட்ட சிறுவன் ராஜேஷை அடித்து கொலை செய்து நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் புதைத்துவிட்டதாக அவர்கள் கூறிய தகவலால் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சரணடைந்த 3 பேரையும் நுங்கம்பாக்கம் சுடுகாட்டிற்கு நேரில் அழைத்து வந்து விசாரித்தனர். கொலை நடந்த அன்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ராஜேஷ் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மோதலில் தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவன் உட்பட 4 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வேறு காரணம் இருப்பதாக சிறுவனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரும் அதே சூளைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தான். கொலையான சிறுவன் உட்பட 5 பேரும் படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு கஞ்சா உட்பட போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. கொலை நடந்த அன்றும் 5 பேரும் கஞ்சா போதையில் சுடுகாட்டில் அமர்ந்துள்ளனர்.
கஞ்சா போதையில் ஏற்பட்ட மோதலில் சிறுவன் ராஜேஷை அடித்துக் கொலை செய்துவிட்டு, அதில் 2 சிறுவர்கள் கொலை நடந்த சுடுகாட்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் சக ஊழியர்கள் சென்றதும் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
சிறுவன் மாயமான புகாரை 6 மாத காலமாக காவல் துறையினரும் கண்டுகொள்ளாததால், கொலை செய்தவர்களும் தப்பித்து வந்துள்ளனர். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பரை தாக்கிய வழக்கில் தற்போது கைதான சிறுவர்களில் இருவர் சிறைக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஏற்கனவே சிறையில் உள்ள இவர்களின் கூட்டாளியும் ரவுடியுமான மாவா வெங்கடேசனிடம் சிறுவன் ராஜேஷை கொலை செய்து புதைத்த தகவலை கூறியுள்ளனர். அதன் பிறகு தான் இந்த கொலை சம்பவம் என்றாவது தெரிந்தால் எதிர்காலத்தில் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும் எனக் கூறி 18 வயது பூர்த்தியாகும் முன்பே சரணடைந்தால் தண்டனை குறையும் என சில வழக்கறிஞர்கள் ஆலோசனை கூற அதன் படி உறவினர்கள் சரணடைய வைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வளரும் சூழலால் பள்ளி படிப்பை பாதியில் விட்டு போதையின் பாதைக்கு செல்லும் சிறுவர்கள் சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் கொலை வரை செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறமிருக்க காவல் துறையினரோ சிறுவன் மாயமானதாக கொடுக்கப்பட்ட புகாரில் உடன் சுற்றி திரியும் இவர்களை பிடித்து முறையாக விசாரித்திருந்தால் அப்போதே கொலை கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.