சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை!
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை சென்னை திருவொற்றியூரில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூரில் கடந்த 9ம் தேதி அஜாகஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள மழை நீர் கால்வாயில் அடையாளம் தெரியாத 21 வயது மதிக்கதக்க இளைஞர் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார்,உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆட்டுக்கறி கடையில் பயன்படுத்த கூடிய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் நவாசுதீன் என்பவரின் மகன் முகமது உசேன் என்றும், அவரை தந்தையே கொன்றதும் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டதால், மகனை பராமரிக்க முடியாததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, நவாசுதீனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.