சென்னையில் போலி பாஸ்போர்ட் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது..!
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து கைது செய்து வருகிறார்கள். கடந்த 7.5.18 அன்று பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானத்தில் சென்னை வந்த தேவராஜ் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேனியைச் சேர்ந்த அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து அசோக்குமார் என்பவர் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல கடந்த 7-ந் தேதி அன்று மதிவாணன் (வயது 58) என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துருக்கி நாட்டிற்கு செல்ல விமான நிலையம் வந்த போது மதிவாணனிடம் 5 போலி பாஸ்போர்ட்டுகள் இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதிவாணனையும் சிறைக்கு அனுப்பினார்கள். அவர் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட தேவராஜ், மதிவாணன் ஆகியோருக்கு பின்னணியில் ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனபால் (55), கவிஞர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த முனியாண்டி (52), மயிலாப்பூரைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.
இவர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டை போலியாக தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அது போல் 5 போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து துருக்கியில் வசிப்பவர்களுக்கு சப்ளை செய்ய மதிவாணன் மூலம் கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. இந்த போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு உதவி செய்து வந்துள்ளனர். துருக்கியில் வசிக்கும் இலங்கை மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்த போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து கொடுத்தனுப்பியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், போலி பாஸ்போர்ட் கும்பலைச் சேர்ந்த தனபால், முனியாண்டி, கார்த்திக் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 போலி பாஸ்போர்ட்டுகள், ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய பாஸ்போர்ட்டுகளை போலியாக தயாரித்து வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த இந்த கும்பல் பற்றி தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது.