உடல் நலத்தை பேணும் நோக்கோடு நாட்டுக்கோழி வாங்கச்செல்லும் வாடிக்கையாளர்களிடம் போலி நாட்டுக்கோழிகள் விற்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. அசல் எது போலி எது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி
மாறிவரும் காலச்சூழலில் உடல் நலத்தை பேணுவதில் சென்னை வாசிகள் அதிக அக்கறை காட்டுகின்றனர். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது..! காலையில் தினமும் நடைப்பயிற்சி..! ரசாயன கலப்பின்றி இயற்கை உரத்தால் பயிரிடப்பட்ட காய்கறிகள்..! உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமே கொடுக்கும் நாட்டுக்கோழி..! என தங்களது மாற்றத்தால் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முனைப்பு காட்டுகின்றனர்.
மக்களின் இந்த திடீர் மன மாற்றத்தை தங்களது வியாபரத்துக்கு சாதகமாக்கி கொண்ட பிராய்லர் கோழி விற்பனையாளர்கள் , நாட்டுக்கோழிகள் போலவே காட்சி அளிக்கும் பண்ணை கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். பிராய்லர் கோழிகள் போலவே பண்ணைகளில் ஊக்க மருந்து கொடுத்து வளர்க்கப்படும் இத்தகைய கோழிகளை சில வியாபாரிகள் நாட்டுக்கோழி என்று ஏமாற்றி விற்று விடுகின்றனர்.
சென்னையில் வசிக்கின்ற கிராமத்துக்காரர்கள் நாட்டுக்கோழி எது என்று எளிதில் அடையாளம் கண்டு கொண்டாலும், நகர வாசிகளோ கோழிக்கடைகாரர் சொல்லே வேதம் என்று நாட்டுக்கோழி போல காட்சி அளிக்கின்ற பண்ணை கோழிக்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கி ஏமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரசாயண மருந்துகள் மூலம் 30 நாட்களில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற சூழலில், இயற்கை சார்ந்த உணவுகளை உண்டு வளரும் அசல் நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது, ஆனால் பிராய்லர் போலவே ஊக்க மருந்துகளால் வளர்க்கப்படும் பண்ணை கோழியை 250 முதல் 300 ரூபாய் வரை விலைவத்து பண்ணை நாட்டுக்கோழி என்று ஏமாந்தவர் தலையில் கட்டி விடுகின்றனர். மேலும் ஓட்டல்களிலும் நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி பிரை என அனைத்திற்கும் இந்த பண்ணை நாட்டுக்கோழிகளே பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கோழி வியாபாரிகளிடம் ஏமாறாமல், போலி நாட்டுக்கோழியை கண்டு பிடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம், இது அசல் நாட்டுக்கோழி…! இது போலி…!
அசல் என்றால் நாட்டுக்கோழியின் அலகு கூர்மையாக இருக்கும், போலி நாட்டுக்கோழியின் அலகு வெட்டப்பட்டு மொட்டையாக இருக்கும்
நாட்டுக்கோழியின் இறகுகள் பளப்பளப்பாக காட்சி அளிக்கும், போலி நாட்டுக்கோழியின் இறகுகள் சாதாரணமாகவே இருக்கும், அசல் நாட்டுக்கோழியின் கால்கள் ஒல்லியாக திடகாத்திரமாக வலம்வரும் , போலி நாட்டுக்கோழியோ சதைப்பற்றுடன் அச்சுஅசல் நிறம் மாறிய பிராய்லர் கோழி போலவே தோற்றம் அளிக்கும்
அசல் நாட்டுக்கோழியின் கண்ணிலும், நடையிலும் ஒரு வித சுறு சுறுப்பையும், மிடுக்கையும் காணமுடியும், போலி நாட்டுக்கோழி தூங்கி வழிவது போல காணப்படும்..! கட்டிப் போடாவிட்டாலும் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்கிறார் நாட்டுக்கோழி விற்பனையாளர் ரமேஷ்.
விழுப்புரம், திண்டிவனம், அச்சிரப்பாக்கம், பண்ருட்டி, செஞ்சி, பெண்ணாத்தூர் , விருத்தாசலம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் அசல் நாட்டுக்கோழிகள் வரவைத்து விற்கப்படுகின்றது.
சதைப் பற்று குறைவாக இருந்தாலும் புரதச்சத்து நிறைந்தும் காணப்படும் நாட்டுக்கோழியை வாங்கி சாப்பிடுவதை வழக்கப்படுத்தினால் குழந்தைகள், பெண்கள் என அனைவரின் உடல் நலத்துக்கும் நலம் பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்..!