சென்னையில் பேருந்தில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை!
அரசு பேருந்தில் பயணித்த ஐஐடி மாணவிக்கு சென்னையில் பாலியல் தொல்லை தந்த நபரை சக பயணிகள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 26 வயதான இளம்பெண் சென்னை ஐஐடியில் பயின்று வருகிறார். சேலத்தில் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு அரசு பேருந்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் சக பயணிகள் தூங்கும் போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
முதலில் தூக்கத்தில் கால் தெரியாமல் பட்டிருக்கும் என மாணவி நினைக்க, தொடர்ந்து அந்த நபர் அத்துமீறியுள்ளார். சக பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அச்சத்தில் அந்த மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்ததால் அதை பயன்படுத்திக் கொண்டு அந்த நபர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை பேருந்து கோயம்பேடு வந்த போது, மாணவி சக பயணிகள் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் விசாரித்ததில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்தது. தான் குடிபோதையில் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறிய அந்த நபரை சிஎம்பிடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.