சென்னையில் நாளை நடைபெறவிருந்த பாஜக உயர்மட்ட கூட்டம் ஒத்திவைப்பு..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஜெயலலிதா, அண்ணா குறித்து விமர்சித்ததற்கு அதிமுக தரப்பில் கண்டனங்கள் வலுத்து வந்தது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது.
அதில், தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுகவின் இந்த முடிவு குறித்து, அண்ணாமலை அவர்கள் பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார். அதிமுக – பாஜக முறிவுக்கு பின் முதல்முறையாக அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர், நேற்றிரவு பாஜக தேசிய தலைவர் நாட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து, நாளை சென்னையில் பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகதெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை சென்னையில் நடைபெறவிருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மாநிலத் தலைவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆலோசனை நடத்த இருந்தார்.
இந்த நிலையில், கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும், இல்லை என்றால் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை இன்று டெல்லியில் இருந்து திரும்புவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் சென்னை வர தாமதமாகும் என்ற காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.