சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கஞ்சா போதை கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பு!
கஞ்சா போதை கும்பலின் அட்டகாசம் சென்னை வியாசர்பாடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள எஸ்.ஏ. காலனிக்கு நள்ளிரவில் கஞ்சா போதையில் ஒரு கும்பல் வந்துள்ளது. முகத்தை துணியால் மறைத்திருந்த அந்தக் கும்பல் திடீரென காலனியின் எட்டு மற்றும் பத்தாவது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கற்களை வீசியும், கட்டைகளால் தாக்கியும் அடித்து சூறையாடியது. ஆட்டோ ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் முரளியையும் அந்தக் கும்பல் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.
கஞ்சா போதைக் கும்பலின் அட்டகாசத்தில் அப்பகுதி வாசிகள், பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று மணிகண்டன் என்ற இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சா கும்பலால் வீதியில் நடமாட முடியாத சூழலும் இருப்பதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எம்.கே.பி. நகர் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்ளாததும், கஞ்சா கும்பல் தொடர்பாக புகார் அளித்தால் கண்டுகொள்ளாமல் இருத்தலுமே அட்டகாசம் அதிகரிக்கக் காரணம் என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே கஞ்சா போதையில் நிகழும் அட்டகாசத்தை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.