சென்னையில் நகர்புற ஏழைகள், குடிசைவாழ் மக்களை வெளியேற்றுவதை கைவிடுக! தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்!
அன்புடையீர்!, வணக்கம். தமிழக அரசு நீர்வழிக்கரையோர மக்களையும், இதர குடிசைப் பகுதி மக்களையும் வெளியேற்றி, புறநகர் பகுதியின் வெகுதூரத்தில் மறு குடியமர்த்தி வருகிறது. 01.12.2017 அன்று காலை பல்லாவரம் அனகாபுத்தூர் பகுதியிலும், சேப்பாக்கம் 62வது வட்டத்தில் ஐந்து குடிசை பகுதிகளையும் நான் பார்வையிட்டேன். இங்கு பல அத்துமீறல்கள் நடைபெறுவதை அறிய முடிந்தது. அனகாபுத்தூர் 18வது வார்டில், தாய்மூகாம்பிகை நகர், டோபி கானா தெரு, 17வது வார்டில் தோழர். ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர், திருமலை நகரின் ஒரு பகுதி, 1வது வார்டில் சாந்தி காலனி ஆகிய இடங்களில் சுமார் 670க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கத் துவங்கியுள்ளனர். இதே போன்று சிந்தாதிரிப்பேட்டையில் சுமார் 1500 வீடுகளை அப்புறப்படுத்தும் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர அண்ணாநகர், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர்.
அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றிலிருந்து அரசு திட்டமிட்ட 50 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகள் ஓரளவு உள்ளன. ஆனால் அதிகாரிகள் இதை காரணமாக வைத்து 50 மீட்டருக்கு வெளியே உள்ள வீடுகளையும் இடிக்கத் துவங்கியுள்ளனர். வட்டாட்சியர், ஆர்.டி.ஓ. மற்றும் இதர அதிகாரிகள் 50 மீட்டருக்கு வெளியே உள்ள மக்களை அழைத்து, நீங்களாகவே காலி செய்து விடுங்கள் இல்லையேல் நாங்கள் இடித்து விடுவோம், ஒரு பொருளையும் எடுக்கவிட மாட்டோம் என்று மிரட்டுவதாக மக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர். ஒரு புறம் வெகுதொலைவில் வீட்டைக் காட்டி வெளியேற்றுவது, வெளியேறவில்லையென்றால் அதுவும் கிடைக்காது என மிரட்டுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அனகாபுத்தூரில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும். இதே அளவு வேலைவாய்ப்பு பறிபோகும். பல பெண்கள் வீட்டுவேலை, முறைசாரா, சிறு வியாபாரம் செய்து வருவது பறிக்கப்படுகிறது. மறுபுறத்தில் பெரும் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் 50 மீட்டருக்கு உள்ளேயும் ஆற்றுக்குள்ளும் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதுபோன்ற பல நிறுவனங்களை அரசும், அரசு நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.
1. எனவே, நீர்வழிக் கரையில் 50 மீட்டருக்குள் குடியிருக்கும் மக்களுக்கு அருகாமையிலேயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அகற்றப்படும் இடங்களின் அருகாமையில் இதற்கான வாய்ப்புகள் உள்ளது. அனகாபுத்தூரில் உள்ள அரசு நிலங்களையும், பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தையும் இதற்கு பயன்படுத்த வேண்டும். சிந்தாதிரிப்பேட்டை ஐந்து குடிசை பகுதிகளில் மாநில அரசு ஏற்கனவே கல்நார் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதை தற்போது அகற்றுகிறது. இங்கும் ஆற்றின் மையப்பகுதியிலிருந்து 50 மீட்டர் தூரத்தை கடந்து மீதமுள்ள இடத்தில் இப்பகுதி மக்களுக்கு அங்கேயே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். இது சாத்தியமானதுதான். அருகாமையில் நெடுஞ்செழியன் காலனி என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு இவ்வாறு கட்டப்பட்டுள்ளது. வேலை, கல்வி, சமூக உறவுகள் பாதிக்காத வகையில் மூன்று முதல் 5 கிலோ மீட்டர் எல்லைக்குள் மறுகுடியமர்த்தல் அமைய வேண்டும் என மறு குடியமர்த்தல் வழிகாட்டல்கள் இருக்கிறது. இதை அரசு கடைபிடிக்க வேண்டும்.
2. அடையார் ஆறு மற்றும் கூவம் ஆற்றின் கரையில் 50 மீட்டர் கடந்து குடியிருக்கும் மக்களை இதே காரணத்தைக் காட்டி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இடித்து தள்ளுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சொந்த வீட்டு மக்களின் வாழ்விடங்களை அரசு அபகரித்து வசதி படைத்தவர்களுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் கொடுப்பது சட்டவிரோதமானது. இதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். சென்னையில், நகர்புற ஏழைகள், குடிசைவாழ் மக்கள் பெரும்பகுதி உள்ளனர். மாநில அரசு இவர்களின் பாதுகாவலனாக இருக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறோம்.
இப்படிக்கு, (ஜி. ராமகிருஷ்ணன்) மாநிலச் செயலாளர்
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…