சென்னையில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!
31 தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை சென்னையில் மயிலாப்பூர் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை அண்ணாநகர், அம்பத்தூர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை, மாங்காடு, சேலையூர், தாம்பரம் என 17 காவல்நிலைய எல்லைகளில் தொடர்ந்து சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் நள்ளிரவில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. முதலில் ஒவ்வொரு கடையிலும் சாதாரண கொள்ளை என நினைத்திருந்த அந்தந்த பகுதி காவல்துறையினர், உயரதிகாரிகளுக்கு தனித்தனியாக அறிக்கை அளித்தனர். இதேபோன்று 17 காவல்நிலைய எல்லைகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வந்த அறிக்கைகளை அடுத்து, நடந்த 31 கொள்ளைச் சம்பவங்களுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருப்பதை உயரதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மயிலாப்பூர் காவல்மாவட்ட துணை ஆணையர் சரவணன் தலைமையில் ஒரு தனிப்படையை காவல்துறை உயரதிகாரிகள் அமைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 31 சம்பவங்களும் கடைகளில் நடந்துள்ளது என்றும், அனைத்திலுமே சிசிடிவி காட்சிப் பதிவுகள் இருந்தும் அதன் டிவிஆர்கள் திருடுபோனதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, அனைத்து கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். ஒரு ஸ்கார்பியோ கார், டாடா ஏஸ் ஆட்டோ, ஒரு வேகன் ஆர் கார் ஆகிய 3 வாகனங்கள் கொள்ளை நடந்த அனைத்து பகுதியிலும் உலவியதை அப்பகுதியிலிருந்த பிற சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர்.
ஒவ்வொரு முறையும் வாகனப் பதிவெண்ணை மாற்றி மாற்றி கொள்ளையில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதைப் பெரும்சவாலாக எடுத்துக் கொண்ட காவல்துறையினர் அதிக கொள்ளை சம்பவம் நடந்த அண்ணாநகர் பகுதியில் 15 நாட்கள் சாதாரண உடையில் கண்காணித்தனர். அண்ணாநகர் வழியாகத்தான் நகருக்குள் வரவேண்டும் என்ற வியூகத்தில் இரவு பகலாக கண்காணித்த போது அண்ணாநகர் ரவுண்டானா அருகே ஸ்கார்பியோ காரைப் பார்த்து பின்தொடர்ந்தனர்.
பிற வாகனங்களான டாடா ஏஸ், வேகன் ஆர் ஆகியவையும் கோட்டூர்புரத்தில் இணைந்து கொண்டன.
இதையடுத்து ஏற்கெனவே உஷார்படுத்தப்பட்டிருந்த போலீசார் அதிகாலை மூன்று வாகனங்களையும் மறித்தனர். சாலைத்தடுப்பு வைத்து முதலில் சென்ற ஸ்கார்பியோவை தடுக்க முயன்ற போலீசார் மீது வாகனத்தை ஏற்ற முயற்சித்த அதன் ஓட்டுநர், போலீசாரிடமிருந்து தப்ப முயற்சித்துள்ளார். இதில் சுதாரித்துக் கொண்டு பக்கவாட்டில் நகர்ந்துகொண்டு போலீசார் தப்பியதும், தொலைவில் இருந்த மற்றொரு போலீசார் பிளாட்பாரத்தில் கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து ஸ்கார்பியோ காரின் கண்ணாடி மீது வீசி எறிந்தார்.
அதில், ஓட்டுநர் அருகே இருந்த முன்பக்க கண்ணாடி உடைந்ததையடுத்து கார் நிறுத்தப்பட்டது. பின், மூன்று வாகனங்களையும் துப்பாக்கி முனையில் தனிப்படையினர் சுற்றிவளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சையத் சர்பிராஸ் நவாஸ், முகமது ஷெரின், ராஜா ஆகியோர் எனக் கண்டறிந்தனர். தொடர்கொள்ளையில் ஈடுபட்டு போக்குக் காட்டி வந்த அந்த மூவரையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.