அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவிவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், இன்று 2.30 மணியளவில் வானம் இருட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னையின் தி.நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், கே.கே.நகர், மெரினா, அயனாவரம், அண்ணாசாலை, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது. இது சென்னை வாசிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை அல்லது 8ம் தேதி முதல் பருவமழை தீவிரமடைகிறது என்பதால், அடுத்த 10 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், மேற்கு கடற்கரை ஓர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனால், தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரிக்கலாம்.
மேற்கு தொடர்ச்சிமலையோரத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டத்தின் பகுதிகள், பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள், கோவை மாவட்டத்தின் சில பகுதிகள், நீலகிரி மாவட்டம், வால்பாறை, சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை, முதல் மிககனமழை இருக்கும். அடுத்து வரும் 10 நாட்களில் ஒட்டுமொத்தமாக நாள் தோறும், கனமழை முதல் மிககனழை வரை தொடர்ந்து பெய்யக்கூடும்.