சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கண்முன்னே வெட்டிக் கொலை செய்த நபர்களை, பழிவாங்கும் நோக்குடன் திரிந்த இளைஞரை பெண் ஆய்வாளர் விரட்டிப் பிடித்தார்.
சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் திங்கட்கிழமை இரவு தனது வீட்டின் வெளியே படுத்திருந்தார். இரவு 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருநபர்கள் கார்த்திக்கிடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது திடீரென பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் கார்த்திக்கை அரிவாளால் வெட்டினார். மீண்டும் வெட்ட முயற்சிக்கையில் கார்த்திக் வளர்த்து வந்த நாய்களான ஜிம்மி, டைகர் ஆகியவை தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது பாய்ந்தன. இதனையடுத்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த கார்த்திக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கொலை முயற்சி தொடர்பான தகவல் அறிந்ததும் சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் அளிக்கப்பட்டு ரோந்தில் இருந்த போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதே நேரத்தில் ஐ.சி.எஃப். பகுதியில் தலைமைச் செயலக காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஐ.சி.எஃப். ரயில்வே ஊழியர் குடியிருப்பு அருகே பதுங்கியவாறு நின்ற இளைஞன் ஒருவன் போலீஸாரின் ரோந்து வாகனத்தைப் பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றான். இதனையடுத்து காரில் துரத்திச் சென்று நாராயணியம்மன் கோவில் அருகே அந்த இளைஞனை ஆய்வாளர் ராஜேஸ்வரி மடக்கிப் பிடித்தார். அவனிடமிருந்து ஒரு அரிவாள், பட்டாக்கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் 21 வயதேயான அந்த இளைஞன் அண்ணாநகரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பதும், தனது நண்பனான சூர்யாவுடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. மேலும் நள்ளிரவில் கஞ்சா அடிக்க வரும் அருண் என்பவனையும் கொலை செய்வதற்காக ஐ.சி.எஃப். பகுதியில் பதுங்கியிருந்ததாக சஞ்சய் கூறினான்.
21 வயதேயான சஞ்சய்குமாருக்கு கொலை செய்யும் அளவுக்கு அவசியம் என்ன என்பது குறித்து விசாரித்த போது, 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தந்தையின் கொலையும் அதற்கு பழிவாங்கும் சஞ்சயின் திட்டமும் தெரியவந்தது . சஞ்சய்குமாரின் தந்தையான வன்னியசம்பத், பா.ம.க. வழக்கறிஞர் பிரிவில் நிர்வாகியாக இருந்தவர். எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
13 வயது சஞ்சய்குமாரை பள்ளியில் விடச் சென்ற போது, புதிய ஆவடிசாலை பகுதியில் கார்த்திக்கும் அருணும் சேர்ந்து வன்னிய சம்பத்தை கொலை செய்தனர். சஞ்சயின் கண்களை ஒருவர் மூடிக் கொள்ள மற்றொருவர் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சிறு வயதில் இச்சம்பவத்தை நேரில் பார்த்த சஞ்சய் குமாருக்கு, ஆறாத வடுவாக மனதில் பதிந்துவிட்டது.
தற்போது சஞ்சய் குமாருக்கு 21 வயதாகும் நிலையில், வன்னியசம்பத் கொலை தொடர்பான வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கின் விசாரணையின் போது சமீபத்தில் சஞ்சயை நேரில் பார்த்த அருண் குமார், தந்தையைக் கொன்றது போலவே சஞ்சயையும் அவரது அண்ணனையும் வெட்டிக் கொன்றுவிடுவதாக கூறியுள்ளான். இதனால் தானே முந்திக் கொண்டு கொலை செய்ய திட்டமிட்ட சஞ்சய்குமார்,
ஐ.சி.எஃப். பகுதியில் கஞ்சா அடிக்க வரும் அருண்குமாரை கொலை செய்ய ஆயுதங்களுடன் சென்றுள்ளான். அருண் குமார் வருவதற்கு நேரமாகும் என்பதால் அதற்குள் கார்த்திக்கை கொலை செய்ய முயன்றுள்ளான். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலை நடக்கும் முன்பே தடுத்து நிறுத்திய ஆய்வாளர் ராஜேஸ்வரியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.