சென்னையில் கடல் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற படகு போட்டி!
கடல் மாசு குறித்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படகுப் போட்டி நடைபெற்றது.
ஆண்டுதோறும் கடலில் சேரும் மாசுக்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் படகுப் போட்டி நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் மாவட்ட முற்போக்கு மீனவர் சங்கம் மற்றும் கடல் விழிப்புணர்வு குழு சார்பில் நடைபெற்ற இந்த படகு போட்டியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஏராளமான மீனவர்கள் ஆர்வமுடன் இந்த படகுப் போட்டியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும், சக மீனவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடலில் 10 கிலோ மீட்டர் தொலைவு சென்றுவிட்டு மீண்டும் கரைக்கு முதலில் திரும்பி வந்த படகுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் படகுப் போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
இந்த படகு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த, திருவான்மியூர், நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட அணிகளுக்கு நடிகர் பார்த்திபன் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும், அதற்கான கால அவகாசத்தை தற்போது எடுத்துக்கொண்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கடலில் மீன்கள் தவிர்த்து 20 சதவீதம் பிளாஸ்டிக்குகள் வலைகளில் சிக்குவதாக மீனவர்கள் கூறியது வருத்தமளிப்பதாகவும் பார்த்திபன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.