சென்னையில் உயிரை கொடுத்து பேத்தியின் உயிரை காப்பாற்றிய பெண்!

Default Image

பால்கனி இடிந்து விழுந்ததில் சென்னை முகப்பேரில்  பலியான பெண், உயிர் போகும் தருணத்திலும் தனது மடியில் இருந்த 8 மாத குழந்தையான தனது பேத்தியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் நடராஜன் – லெட்சுமி தம்பதியினர் 14 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு தமிழ்செல்வி, சுகன்யா என இரு மகள்களும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எட்டுமாத பெண் குழந்தையான தனது பேத்தி லட்சணாவை மடியில் வைத்தபடி லட்சுமி பால்கனியில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தார். அவரது கணவர் நடராஜனும் அருகே அமர்ந்து மகள்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென மேலே உள்ள இரண்டாவது தளத்தின் பால்கனி இடிந்து இவர்கள் மீது விழுந்தது. அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேத்தியை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்த லட்சுமி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருப்பது தெரிந்தது.

ஆனால், மடியில் இருந்த பேத்தியின் மீது இடிபாடுகள் விழாமல் குனிந்து தடுத்தபடியே லட்சுமி தனது உயிரை விட்டிருப்பதை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். அருகில் அமர்ந்திருந்த லெட்சுமியின் கணவர் நடராஜன் பலத்த காயமடைந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். லெட்சுமியின் இரண்டு மகள்களும் சிறு காயத்துடன் தப்பினர்.

இதனிடையே, பால்கனி இடிந்து விழுந்த போது இடிபாடுகள் தெருவிலும் விழுந்தன. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மகேஸ்வரன் மீது விழ, ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

உயிரிழந்த லட்சுமி குடியிருந்த வீடு கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பழுதடைந்த பகுதிகளை சீரமைத்துத் தரும்படி  பலமுறை கேட்டும், உரிமையாளர் குமார் அதைப் பொருட்படுத்தவில்லை என வாடகைக்குக் குடியிருப்போர்  கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து நொளம்பூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமி தனது உயிரை விட்டு, தனது பேத்தியின் உயிரை காப்பாற்றிய இந்த சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்