சென்னை:கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலைக்கு அனுமதி வழங்க..!சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை..!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு அனுமதி வழங்குவதற்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதிகரித்து வரும் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பெரூர் என்ற இடத்தில் நாளொன்றிற்கு 40 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைக்க சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டிருந்தது. இதற்காக கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் சென்னை குடிநீர் வாரியம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நிபுணர் மதிப்பீட்டுக் குழு 6 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆலையால் கடலோரத்தில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் இழப்பீடுகளுக்கான முழுப் பொறுப்பை சென்னை குடிநீர் வாரியமே ஏற்றுக்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்றும் சுனாமி பேரலைகள் பாதிக்காதபடி ஆலை அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதுமட்டுமல்லாது ஆலை கட்டுமானத்தின் போது கடலில் பதிக்கப்படும் குழாய்களை கட்டுமானம் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றிவிட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்