சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் சிலர் செருப்புகளை மைதானத்துக்குள் எறிந்தனர்.
மேலும், சென்னை பல்லாவரம் சங்கர் நகர் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெயசந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து காவலர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேரை கைது போலீஸார் சிறையில் அடைத்தனர்.
காவலர் செந்தில்குமார் தாக்கப்பட்டபோது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருகில் இருப்பது வீடியோவில் பதிவானதைத் தொடர்ந்து சீமான் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் இது தொடர்பாக இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”ஐபிஎல்க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், தி.மு.காந்தி, திருமாவளவன் அனைவருமே ஆகும். எனவே கொலை முயற்சி வழக்கு இவர்கள் அனைவர் மீதும் தொடரப்பட வேண்டும்” என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.