சீனாவில் இருந்து தமிழகம் வந்து இந்து முறைப்படி திருமணம்!
இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்துகொண்ட சீன நாட்டு ஜோடிகளுக்கு நாகை மாவட்டம் சீர்காழி அருகே கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணரான ரூபிங்கும் ,பெய்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணரான யானும் (Yan) காதலர்கள். சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்தில் இயங்கி வரும் சத்குரு ஒளிலாய பீடத்தின் வலைதளத்தில் இந்து கலாச்சார திருமண முறை குறித்து பார்த்து அறிந்த அவர்கள், அதன் மீது ஈர்ப்பு கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்ய விரும்பி, சீனாவில் இருந்து காரைமேடு வந்து சித்தர்களைச் சந்தித்து ஆசி பெற்று, திருமணம் செய்துகொண்டனர்.
சீன நாட்டு ஜோடிகள் முதியவர்களுக்குப் பாத பூஜை செய்து, வேத மந்திரங்கள் முழங்க, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டிக்கொண்டனர். காரைமேடு கிராம மக்கள் திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.