சீக்கிரம் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் மூன்று லட்சம் மக்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம்!தங்கதமிழ்செல்வன் கடும் எச்சரிக்கை
தங்கதமிழ்செல்வன் ,ஆண்டிபட்டி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் மூன்று லட்சம் மக்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார்.
18 சட்டப்பேரவை உறுப் பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறினர். எனவே இந்த வழக்கு 3-வது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக் கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலர் தங்கதமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார். இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்துள்ளது. அரசுக்கு எதிராக வாக் களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இனியும் நீதிமன்றத்தை நம்பிப் பலன் இல்லை. எனவே வழக்கை வாபஸ் பெறலாமா? அல்லது இடைத்தேர்தலை சந்திக்கலாமா? எனக் கருத்து கேட்டார்.
அதற்கு பதில் அளித்த மக்கள் வழக்கை வாபஸ் பெற்று இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: இந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளேன். துணை பொதுச்செயலர் தினகரனும் என் முடிவை ஏற்றுக்கொண்டார். பிற எம்எல்ஏக்களும் இதேபோன்ற முடிவெடுக்க வாய்ப்புள்ளது.
18 பேரும் வழக்கை வாபஸ் பெற்று ராஜினாமா செய்தால் எங்கள் போராட்டம் இன்னும் வலுவடையும்.
ஆண்டிபட்டி தொகுதியில் ஏராளமான அடிப்படை பிரச்சினைகள் உள்ளன. எனவே இங்கே ஒரு பிரதிநிதி தேவை. இங்கே உடனடியாக இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் மக்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.