சிறந்த சட்டம் ஒழுங்கு, சுற்றுலா வளர்ச்சி…தமிழகத்திற்கு 3 விருது…முதல்வர் பெருமிதம்..!!
டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலுக்கு நிவாரண உதவி கோரினார். இதையடுத்து டெல்லியில் இந்தியா டுடே சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நாடு முழுவதும் அனைத்து மாநில பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தமிழக அரசுக்கு சிறந்த சட்டம் ஒழுங்கு, சிறந்த சுற்றுலா வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. விருதுகளை துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடுவிடம் இருந்து முதலமைச்சர் பெற்று கொண்டார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் வலிமையான மற்றும் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் வலிமையான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 8.4 சதவிகிதம். இந்திய அளவில் வறுமையை ஒழிப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. சரியான கொள்கை முடிவுகளும், தொலைநோக்கு பார்வையுமே இதற்கு முக்கிய காரணங்கள்.
dinasuvadu.com