சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை கொளுத்தி மாதர் சங்கம் மற்றும் மாற்று திறனாளி சங்கம் போராட்டம்..!

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சில சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வல்லுறவு செய்தனர். ஆளும் அதிமுக-வின் செல்வாக்கோடு செயல்படும் இந்த சமூகவிரோத குற்றவாளிகளில் அந்த ஊராட்சியின் வார்டு கவுன்சிலரான சித்தலிங்கா என்பவரும் அடக்கம்.

இந்த வழக்கில் ஆரம்பம் முதல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளூர் ஊர்தலைவர்கள், காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. சுமார் ஒருவார காலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது மகள் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டதை அவருடைய தந்தை பலமுறை வலியுறுத்தியும். அதற்கான உரிய நடவடிக்கையை அங்கிருந்த மருத்துவர்கள் யாரும் எடுக்கவில்லை.

சுமார் ஒருவார காலத்திற்குப் பின்னர் தகவல் அறிந்து மாற்று திறனாளிகள் சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் தலையிட்டு போராட்டம் அறிவித்த பின்னரே, பெயரளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு நிர்வாகமும், குற்றவாளிகளுக்கு சாதகமாகவே மீண்டும் மீண்டும் செயல்பட்டதால், மாற்றுத்திறனாளி சிறுமியின் தந்தை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. 2015 செப்டம்பர் மாதத்தில், இந்த வழக்கு சிபி-சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்த பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமியையே புணையப்பட்ட புகார்களைக் கூறி குற்றவாளியாக்கி, மோசடியான, ஒருதலைப்பட்சமான, விசாரணை அறிக்கை ஒன்றை சிபி-சிஐடி தயாரித்துள்ளது.

சிபி-சிஐடியின் இந்த மோசடி அறிக்கையை எரிக்கும் போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் நவ-28 அன்று நடைபெற்றது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத்தலைவர் பா.ஜான்ஸிராணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்