சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் நிரம்பியதால்-ஊர் மக்கள் மகிழ்ச்சி!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் கடந்த ஆண்டு அதிகளவில் வறண்டு போயின.இதனால் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து சென்னை மக்களுக்கு தமிழக அரசு குடிநீர் வினியோகம் செய்தது.
இதன் காரணமாக கல்குவாரியில் நீர் குறைந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பின. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் சிக்கராயபுரம் கல்குவாரிக்கு செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து கோடையிலும் சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. குன்றத்தூர், மாங்காடு, சிக்கராயபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் தினந்தோறும் இங்கு வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.
இதனால் பெரும்பாலும் கல்குவாரியில் உள்ளூர் மக்களே ஆர்வமுடன் குளிக்க வருகின்றோம் என்று இப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் எங்கு பள்ளம், பாறை உள்ளது என்பது எங்களுக்கு அதிகம் தெரியும். பெரும்பாலும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இங்கு குளிக்கின்றனர்.
தற்போது நீர் நிரம்பி இருப்பதால் கோடையை சமாளிக்க இங்கு அதிக அளவில் குளிக்க வருகிறோம். நீச்சல் குளங்களுக்கு குளிக்க 1 மணி நேரத்துக்கு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும். அதில் வேதிபொருட்கள் கலந்திருக்கும்.
ஆனால் இங்கு குளிக்க எவ்வித கட்டணமும் கொடுக்க வேண்டியது இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். இயற்கையான தண்ணீர் உள்ளது. இங்கு குளிப்பது சற்று ஆபத்து என்றாலும் பாதுகாப்போடு நண்பர்களுடன் குளிப்பதால் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு இணைந்திருங்கள் தினச்சுவடுடன்.