சாலை தடுப்புகளை தீ பொறி பறக்க பைக்கில் இழுத்து செல்லும் இளைஞர்கள்
போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் வைத்திருக்கும் தற்காலிக தடுப்புகளையே இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள், நெருப்புப் பொறி பறக்க இழுத்துச் செல்லும் அதிரவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல் துறை எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இந்த பைக் ரேஸ் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில், இதேபோல் அட்டகாசத்தில் ஈடுபட்ட 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தததோடு 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், இரவு 11 மணிக்குமேல் இத்தகைய அத்துமீறல்கள் தொடர்கின்றன. மேலும் இந்த அத்துமீறலில் ஈடுபடும் இளைஞர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் வைத்திருக்கும் தற்காலிக சாலைத் தடுப்பையே தங்கள் பைக்கில் நெருப்புப் பொறி பறக்க இழுத்துச் செல்கின்றனர். இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் நிலதடுமாறி விபத்தை ஏற்படுத்துவதற்கான நிலை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.