சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன..!
சேலத்தில் கொட்டனத்தான் ஏரியில் சாயக்கழிவுகளை திறந்துவிட்டு மீன்கள் செத்து மிதப்பதற்கு காரணமான 4 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் 3 ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் நெய்காரப்பட்டி கொட்டனத்தான் ஏரியில் திறந்து விடப்பட்ட ரசாயண சாயக்கழிவுகளால் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. துர் நாற்றத்தை போக்க மதகை உடைத்து ஏரித்தண்ணீரை பொதுமக்கள் வெளியேற்றினர்.சாயக்கழிவுகளை ஏரியில் திறந்துவிட்ட சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வீரபாண்டி அதிமுக எம்.எல்.ஏ மனோன்மனீயம் உறுதி அளித்தார். அதன்படி இந்த சாயக்கழிவு பிரச்சனை குறித்து முதல் அமைச்சரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டது.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரின் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது. மாவட்ட ஆட்சியர் ரோகினியின் அறிவுறுத்தலின் பேரில் 30 க்கும் மேற்பட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சேலம் சிலோன் காலணி சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் சாய ஆலைகளில் இருந்து, கொட்டனத்தான் ஏரியில் சாயகழிவுகள் கல்லக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள சண்முக பிராசசிங், கருப்பசாமி கலவை ஆலை, சுப்பிரமணி பிலீச்சிங் உள்ளிட்ட 3 ஆலைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக இயங்கி வந்த 4 சாயப்பட்டறைகளும் இடித்து அகற்றப் பட்டன. சாய ஆலைகளில் இருந்து ரசாயன கலவைகளையும் அமிலங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் குத்தகை பணத்துக்கு ஆசைப்பட்டு இது போன்ற சட்ட விரோத சாய ஆலைகளுக்கு இடம் கொடுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
வியாழக்கிழமை ஒரே நாளில் 7 சாய ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீருக்கும், ஏரி குளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சாய ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகினி உறுதி அளித்துள்ளார்.
பொதுமக்களும் தங்கள் பகுதியில் இயங்கி வரும் சட்ட விரோத சாய ஆலைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.