சசிகலா பிரமாணப்பத்திரத்தில் பரபரப்பு தகவல்!ஜெயலலிதா சிகிச்சைக்கு மறுத்து வந்தார் …..
சசிகலா ஜெயலலிதாவின் அனுமதியுடன் அவ்வப்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை வீடியோ பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், 2015 மற்றும் 2016ம் ஆண்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் தான் வீடியோ எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நான்கு முறை வீடியோ பதிவு செய்ததாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். அனைத்து வீடியோக்களும் ஜெயலலிதாவின் அனுமதி பெற்றே எடுக்கப்பட்டதாகவும் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா தான் தனது உடல் நிலை குறித்த பதிவுகள் தேவை என்று கூறி தன்னை வீடியோ எடுக்கச் சொன்னதாகவும் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் அனைத்துமே நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 22ந் தேதி ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனையில் பார்த்ததாக சசிகலா கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 27ந் தேதி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அழைத்து வரப்பட்ட போது தனது தனி பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி தான் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசியதை ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்த்ததாகவும் சசிகலா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.