கோவை – பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்: ஜூன் இறுதிக்குள் இயக்க திட்டம்..!
கோவை பெங்களூர் இடையே இயக்கப்பட உள்ள உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் மாத இறுதிக்குள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையிலிருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் இழுபறியில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உதய் எக்ஸ்பிரஸ் இயக்கும் பொருட்டு முதற்கட்டமாக இரட்டை அடுக்குமாடி பெட்டிகள் சோதனை ஓட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து கோவை – பெங்களூர் இடையே இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரட்டை அடுக்குமாடி கொண்ட பெட்டிகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக பிரத்தியேகமான பெட்டிகள் கபூர்தாலவில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு காலதாமதம் நிலவியதால் சென்னை ஐ.சி.எப்.பில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் இரட்டை அடுக்கு ரயில் பெட்டியில் சாய்வு வசதியுடன் கூடிய 114 இருக்கைகள் இருக்கும். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் பெரிய எல்சிடி டிவி பொருத்தப்பட்டிருக்கும். காபி மேக்கர், ஒலிப்பெருக்கி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இப்பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் ஏதாவது ஒரு நாளில் ரயில் இயக்கத்திற்கான விழா நடத்தப்படும். இந்த ரயில் கோவையில் இருந்து காலை 5.45க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மதியம் 12.40க்கு பெங்களூர் சென்றடையும். இதேபோல், பெங்களூரில் இருந்து மதியம் 2.15க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.