கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடர் மழை! நிரம்பி வரும் அணைகள்.! விவசாயிகள் மகிழ்ச்சி..!
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் பவானி, நொய்யல், சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன.
தொடர்மழை காரணமாக கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை 15 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 24 அடியாக உயர்ந்துள்ளது.
2 நாட்களில் மட்டும் 9 அடி அதிகரித்துள்ள நிலையில் இன்றும் சிறுவாணி அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 100 அடி கொண்ட அணையின் நீர் மட்டம் நேற்று 97.25 அடியை எட்டியது. இரவில் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த நீர் அப்படியே திறந்து விடப்பட்டது.
160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6273.50 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையோர பகுதியில் 115 மில்லி மீட்டர் மழை பதிவாக உள்ளது.
120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 58.40 அடியாக இருந்தது. வினாடிக்கு 240 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 34 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.90 ஆக உள்ளது. வினாடிக்கு 1988 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 7 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடி ஆகும். இன்று காலை அணை நீர்மட்டம் 12.74 அடியாக இருந்தது. வினாடிக்கு 15 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2482 அடி கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 14 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கெத்தை அணை முழு கொள்ளளவான 89 அடி உயரத்தை எட்டியது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பரளி மின் வாரியத்தை அடைகிறது.
தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.