கோவை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலி சிக்கியது!
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப் புலி கோவை மாவட்டம் வால்பாறையில் கூண்டில் சிக்கியது. வால்பாறை அருகே காஞ்சமலை தேயிலைத் தோட்டப் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு, 52 வயது பெண் ஒருவரை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றது. மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேரை சிறுத்தைப்புலி தாக்கிய நிலையில், காஞ்சமலை மற்றும் சின்கோனா பகுதிகளில் 4 இடங்களில் வனத்துறை அதிகாரிகள் கூண்டு அமைத்தனர்.
சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்களையும் பொருத்தியிருந்தனர். இந்நிலையில், சின்கோனா பகுதியில் வைக்கப்பட்ட கூண்டு ஒன்றில், இன்று அதிகாலையில் ஆண் சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தைப்புலியை பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கூண்டில் சிக்கிய சிறுத்தைப் புலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது.
தேயிலை தோட்டப்பகுதியில் மேலும் சிறுத்தைகள் இருக்கலாம் என்பதால், கூண்டுகளை வைத்து கண்காணிப்பை தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.