கோவையில் 5 ரூபாய் போதை பொருள் விற்பனை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு!
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண மருந்து கொடுக்கப்படுகிறது. 5 மில்லி அளவு கொண்ட மிகச்சிறிய பாட்டிலில் இருக்கும் இந்த மருந்தின் விலை ரூ.5 மட்டும்தான். குறைந்த விலையில் அதிகபோதை கிடைப்பதால் இதை வாங்க போதைப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு இந்த மருந்தை திருடும்போது, கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 24) என்பவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வலி நிவாரண மருந்தை குளுக்கோசில் கலந்து ஊசி மூலம் உடலில் ஏற்றும்போது போதையை ஏற்படுத்தும் என்றும், அதை ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கும்பலை சேர்ந்த அப்துல் ரகுமான், மகேந்திரன், அஜய், அசோக், ரோகித் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் வலி நிவாரண மருந்தை கோவையில் உள்ள 7 தனியார் ஆஸ்பத்திரிகளில் திருடியது மட்டுமின்றி பெங்களூருவில் இருந்தும் வாங்கியது தெரிந்தது. இந்த மருந்தை கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து, அவர்களை போதைக்கு அடிமையாக்கியதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் கோவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் பின்னணியில் பெங்களூருவை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
பெங்களூருவை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதிகளை தங்களின் கைக்குள் போட்டுக்கொண்டு இந்த 5 பேரும் வலி நிவாரண மருந்தை வாங்கி வந்து விற்பனை செய்து உள்ளனர். எப்படியும் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று அறிந்த அவர்கள், பெங்களூருவில் இருந்து மருந்தை வாங்கி வருவது தெரியாமல் இருப்பதற்காக, கோவையில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகளில் மருந்தை திருடி உள்ளனர். அதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.
எனவே அவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று இந்த சம்பவத்தில் பெங்களூருவை சேர்ந்த ஒரு கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களின் தொழிலே போதை மருந்துகளை விற்பனை செய்வதுதான். அவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது அவர்களின் செல்போன் எண்கள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.
எனவே அவர்களை பிடிக்க தனிப்படையினர் பெங்களூரு விரைந்து உள்ளனர். அங்குள்ள போலீசார் உதவியுடன் அந்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்.