கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறிய தினகரன் அணி எம்எல்ஏக்கள்!தினகரனின் நிலை என்னவாகும்?
அ.தி.மு.க. கூட்டணி எம். எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி தினகரனை ஆதரித்த நிலையில் இப்போது தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அரசை முக்குலத்தோர் புலிப்படை எம்.எல்.ஏ. கருணாஸ் தற்போது கடுமையாக வசைபாடுகிறார்.
டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் இவர் அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் தி.மு.க. நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார். சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி அரசை ஆதரித்து பேசுவதும் இல்லை.
கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. தனியரசு ஆரம்பத்தில் தினகரன் பக்கம் இருந்தாலும் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். தமிமுன் அன்சாரி மற்றும் கருணாசுடன் கூட்டு சேராமல் தனித்து செயல்படுகிறார்.
மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது ரம்ஜான் நோன்பு கஞ்சி இலவச அரிசி வழங்குவது குறித்து பேசியதாக தெரிவித்தார். கட்சி விஷயங்கள் குறித்து பேசவில்லை என்றார்.
எடப்பாடி பழனிசாமி – தினகரன் அணி இரண்டும் இணைய வேண்டும் என்று பாடுபட்டதாகவும் அது சாத்தியமில்லாததால் தான் ஒதுங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாகவே கருத்து சொல்லி வந்தனர். ஆனால் இப்போது 3 பேரும் தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர். இந்த போக்கு தினகரனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டுமல்ல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜி, பழனியப்பனை தவிர மற்ற 16 எம்.எல்.ஏ.க்களும் நமது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வெறுத்துபோய் உள்ளனர்.
எம்.எல்.ஏ.வாக இல்லாததால் தொகுதியில் வலம் வர முடியவில்லை. சட்டசபைக்கு போகாததால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளனர். தீர்ப்பு வரும் என்று காத்திருந்து காலம் விரயமானது தான் மிச்சம் என்று புலம்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.