கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜயகாந்த்: திருப்பூரில் மாநில மாநாடு நடத்த திட்டம்..!
கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது.
கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டசபை தொகுதிகளில் 47-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று, கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்துக் காட்டியது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ஐ கைப்பற்றியது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதற்கு கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜெயலலிதா முன்னுரிமை வழங்கினார். அவரது நம்பிக்கைக்குரிய மாவட்டமாக திகழ்ந்ததால் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்து செயல்படுத்தினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதில் அனைத்து கட்சியினரும் குறியாக உள்ளனர். குறிப்பாக புதிய கட்சி தொடங்கியுள்ள கமலஹாசன் இந்த மாதத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மேலும் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தார்.
கொங்கு மண்டலத்தில் கால் பதிப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனையில் அவர் இருப்பதால் கோவை சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார்.
இதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தனது முதல் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இதற்கு முன் ஏற்பாடாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் தாங்கள் முத்திரை பதிக்க ரஜினி, கமல்ஹாசன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வும் தற்போது களத்தில் குதித்துள்ளது.
தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்ட விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் மாநாட்டை அறிவித்திருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமலை தொடர்ந்து விஜயகாந்தும் கொங்கு மண்டலத்தை குறிவைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குமா? அல்லது இவர்களுக்கு சாதகமாக அமையுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.