கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு …! என்.ஐ.ஏ அமைப்பினர் தீவிர விசாரணை…!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் சுப்பிரமணியம் பாளையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு அமைப்புக்கு ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. குழுவினர், ஏற்கனவே 2 முறை கோவையில் விசாரணை நடத்தி முபாரக், சதாம், சுபேர் மற்றும் அபுதாகிர் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை சாய்பாபா காலனி காமராஜ் சாலை பகுதியில் வசித்து வரும் ஷாஜகான் என்பவர் வீட்டில், என்.ஐ.ஏ. கண்காணிப்பாளர் ராகுல், கூடுதல் கண்காணிப்பாளர் செளகத் அலி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஷாஜகான், அவரின் சகோதரர் மகன் முன்னா உள்ளிட்டோர் 3 மாதத்திற்கு முன், துபாயில் குடியேறி விட்ட நிலையில், அந்த வீட்டில் ஷாஜகானின் சகோதரி மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.