கேரளாவை தொடர்ந்து தமிழகத்தையும் மிரட்டும் எலி காய்ச்சல்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சதீஸ்குமார் என்ற 29 வயது இளைஞர் எலிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பிறகு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவி மக்களை வதைக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் மிக கொடிய பாதிப்பாக இருப்பது `லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல்தான். இதுவரை 72 பேர் இந்த பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் எலிக்காய்ச்சல் பரவத் தொடங்கி உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் காந்திமதி என்ற பெண்மணி கடந்த நான்காம் தேதி உயிரிழந்தார். கடந்த பத்து நாள்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக, கேரள எல்லையான நீலகிரி மற்றும் கோவையில் எலி காய்ச்சலால் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU