கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்..!
சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயிலில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக திண்டுக்கல் உணவுகடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி இன்று காலை 6.20 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உணவுகடத்தல் தடுப்புபிரிவினர் மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
2-ம் வகுப்பு பெட்டியில் அவர்கள் சோதனை நடத்திய போது 34 மூடைகளில் ரேசன்அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அரிசி மூடைகள் யாருடையது என விசாரணை நடத்தப்பட்டபோது யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த சில மாதங்களாக ரெயிலில் கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த மாதமும் இதேபோல் ரேசன் அரிசி கடத்தப்பட்டது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசி மூடைகளை ரெயில்வே காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதனை கடத்தியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்