கூடங்குளம் 2-வது அணுஉலையில் நீராவி வெளியேற்றும் பணி ..!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுவாக 300 நாட்களுக்கு மேல் இயங்கிய அணு உலைகள் பராமரிக்கப்படுவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணிக்காக 2-வது அணு உலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2-வது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிகளில் ரஷியா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து 2-வது அணுஉலையில் இருந்து நீராவி வெளியேற்றும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. பகல் நேரத்தில் மட்டுமே இந்த பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கிறார்கள். இந்த பணியின்போது பயங்கர சத்தத்துடன் வெண்புகை வெளியேறும் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2-வது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து நீராவி வெளியேற்று பணிகள் நடக்கிறது. பகல் நேரங்களில் சில நிமிடங்கள் மட்டும் நடைபெறும் இந்த சோதனையின்போது அணுஉலையில் இருந்து நீராவி வெளியேறும்.
அப்போது பயங்கர சத்தத்துடன் அதிகமாக வெண்புகை வெளிப்படும். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் மூலமும் இதுவரை 26 ஆயிரத்து 776 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீராவி வெளியேற்றும் பணிகள் நாளையும் நடக்கிறது.