குமரி மாவட்டத்தில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளம்!

Default Image

குமரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக இருந்து வந்தது. இந்தநிலையில் கோடையின் உச்சமான அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் ஜில்லென்ற இதமான சீதோஷ்ண நிலையும் காணப்பட்டது.

நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டாலும், இரவில் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் விடிய, விடிய கனமழையாக கொட்டியது. குறிப்பாக குளச்சல், குலசேகரம், திருவட்டார், களியக்காவிளை, கருங்கல், மார்த்தாண்டம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி-மின்னலும் பலமாக ஏற்பட்டது.

நாகர்கோவில் நகரில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சற்று நேரம் நீடித்தது. பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் மீண்டும் தொடங்கிய மழையானது, இடைவிடாமல் சில மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. நேற்று காலையில் மழை இல்லை. மாவட்டத்தில் அதிகபட்சமாக குருந்தங்கோடு பகுதியில் 154.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதே போல் பல்வேறு இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.

மழையால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. கோடை விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவியில் குளிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கொட்டிய அருவி வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதே நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக நாகர்கோவில் அருகே குமரி அணை நிரம்பி தண்ணீர் மறுகாலாக பாய்ந்தோடியது. இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமான அளவு அதிகரித்தது.
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு.

பேச்சிப்பாறை- 51.6, பெருஞ்சாணி- 38.8, சிற்றார் 1- 31.6, சிற்றார் 2- 20.4, மாம்பழத்துறையாறு- 112, புத்தன் அணை- 41.2, பூதப்பாண்டி- 54, களியல்- 38.4, கன்னிமார்- 41.2, கொட்டாரம்- 44, குழித்துறை- 105.4, மயிலாடி- 63, நாகர்கோவில்- 96, சுருளோடு- 60, தக்கலை- 51, குளச்சல்- 64, இரணியல்- 47, ஆரல்வாய்மொழி- 13, கோழிப்போர்விளை- 52, அடையாமடை- 48, குருந்தங்கோடு- 154.6, முள்ளங்கினாவிளை- 54 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

இந்த கன மழையால் குமரி மாவட்டத்தின் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்ததன் காரணமாக இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் மின்சாரம் வந்து, வந்து போனது.

மழையின் காரணமாக நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் ரோட்டில் ஒரு ஆலமரம் சாய்ந்ததில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியிலும், பீச்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை வரை மின்வினியோகம் தடைபட்டிருந்தது. அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் கும்பகோடு, சிதறால் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததில் 3 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியிலும் மின் வினியோகம் தடைபட்டது.

குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக மொத்தம் 2040 குளங்கள் உள்ளன. அவற்றில் சில குளங்கள், இடையிடையே பெய்த மழை மற்றும் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரை தேக்கி வைத்ததால் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நிரம்பின.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் அரைகுறையாக நிரம்பி இருந்த பல குளங்கள் முழுவதுமாக நிரம்பின. மணவாளக்குறிச்சி பெரிய குளம் உள்பட மாவட்டம் முழுவதும் 200 குளங்கள் நிரம்பியிருப்பதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேதஅருள்சேகர் கூறினார்.

அழகியமண்டபம், வில்லுக்குறி, பரசேரி ஆகிய பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு கனமழைபெய்தது. அப்போது, பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சேதமடைந்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்