குட்கா விவகாரம் : “போலீசையே திணறடித்த சிபிஐ அதிகாரிகள்” 7மணி நேரம் விசாரணை..!!
குட்கா முறைக்கேடு வழக்கில் காவல் ஆய்வாளர் சம்பத்குமாரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குட்கா முறைக்கேடு வழக்கில் கடந்த வாரம் 35 இடங்களில் சோதனை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதியளித்ததாக உணவு பாதுகாப்பு மற்றும் கலால் வரி அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ள அதிகாரிகள் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் செங்குன்றம் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருந்த சம்பத்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் சம்பத்குமார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார். கிடங்கு உரிமையாளர் மாதவராவின் டைரியில் இவரது பெயர் இடம்பெற்றிருந்ததோடு கடந்த வாரம் நடைபெற்ற சோதனையில் இவரது வீட்டில் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருந்த சம்பத்குமாருக்கு 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக குட்கா அனுமதித்திக்க எவ்வளவு கையூட்டு பெறப்பட்டது? என்றும் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.குட்கா அனுமதியளிக்க அதிகாரிகள் யாரேனும் நிர்பந்தித்தார்களா? என்றும், அப்படியானால் அந்த அதிகாரிகள் யார்? இவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு காவல் ஆய்வாளர் சம்பத்குமாரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு மேல் பொறுப்பில் இருந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் சம்பத்குமார் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த விசாரணை 7 மணி நேரம் நடைபெற்றதாக தகவல் தெரிகின்றது.
DINASUVADU