குட்கா : காவல் ஆய்வாளரிடம் விசாரணை..!!
செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்திடம் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குட்கா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் பல்வெறு இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து செங்குன்றம் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்டோரை சி.பி.ஐ கைது செய்தது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில் ஏற்கனவே உள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலை சரிபார்த்து ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்களில் முக்கிய நபர்களில் இருவரான செங்குன்றம் சரக உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத் ஆகியோருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் காவல் ஆய்வாளர் சம்பத் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார். முறைகேடு நடைபெற்றதாகச் சொல்லப்படும் காலத்தில் செங்குன்றத்தில் இவர்தான் காவல் ஆய்வாளராக இருந்தார்.
எனவே அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிடங்கு உரிமையாளர் மாதவராவின் டைரியிலும் லஞ்சம் பெற்றவர்கள் பட்டியலில் சம்பத் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.