குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் ஆட்டோவில் கடத்தல்..!

Default Image
குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் ஏட்டுகள் பாபு, செல்லபாண்டியன் ஆகியோர் இன்று அதிகாலை 2½ மணியளவில் பிச்சனூர் அரசமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மடக்க முயன்றனர். போலீசார் மீது மோதுவது போல் ஆட்டோ நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை விரட்டி சென்றனர். 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆட்டோவை ஒரு புதர் மறைவில் நிறுத்திவிட்டு கும்பல் தப்பி ஓடியது.

போலீசார், கும்பலை பிடிக்க பின்தொடர்ந்தனர். கும்பல் சிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டோவில் பார்த்த போது சீல் பிரிக்காத 25 பெட்டிகளில் சுமார் 900 மது பாட்டில்கள் இருந்தது.

மதுபாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பல் வந்த பாதையில் உள்ள டாஸ்மாக் கடைகளை சென்று பார்வையிட்டனர்.

காளியம்மன்பட்டி சாமியார்மலையில் உள்ள மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. உடனடியாக அந்தக்கடை விற்பனையாளர் துரைபாபு மற்றும் மேற் பார்வையாளர் சரவணனை வரவழைத்தனர்.

மதுக்கடை பூட்டுகளை உடைத்த கொள்ளை கும்பல், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா இருக்குமோ? என்ற பீதியில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பிறகு, உள்ளே புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி ஆட்டோவில் கடத்தியது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார், மதுபாட்டில்கள் கடத்திய கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது, கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள காளியம்மன்பட்டி மாணிக்கம் நகரில் உள்ள மதுக்கடையில் கடந்த மாதம் 9-ந் தேதி 350 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடினர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்துள்ள மதுக்கடைகளில் கொள்ளை நடந்துள்ளதால், ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இரவு நேரத்தில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், மதுபான பாட்டில்கள் திருடியதை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே, இரவு நேரங்களில் போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட்டால் குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்