தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆர்டர்லி முறையை கடைபிடிக்கிறீர்களா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், உத்தரவிட்டுள்ளார்.
காவல் உயர் அதிகாரிகளின் இல்லங்களிலும், அலுவலகங்களிலும், அவர்களுக்கு உதவிகள் புரிவதற்காக, காவல்துறையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆர்டர்லியாக பணியமர்த்தப்படுவர்.
இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், பல ஆண்டுகளுக்கு முன் ஆர்டர்லி முறை கைவிடப்பட்டது. இருப்பினும், சில காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையில் பணியில் இருப்பவர்களையே, ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், 1979ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், ஆர்டர்லி முறையை ஒழித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை என்னவாயிற்று என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது காவல்துறையினர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டியிருக்கும் டிஜிபி, ஆர்டர்லி முறை பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, ஏ.டி.ஜி.பி-க்கள், காவல் ஆணையர்கள், ஐ.ஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட, அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும், FAX மூலம் அறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், ஆர்டர்லி முறையை ரத்து செய்து 1979 ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணை பின்பற்றபடுகிறதா? இல்லையா என டிஜிபி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அப்படி ஒருவேளை 1979ஆம் ஆண்டே ஆர்டர்லி முறை ரத்தாகியிருந்தால், அந்த முறை எப்படி இன்னும் தொடர்கிறது என்றும் வினவியிருக்கிறார். பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் இல்லங்களில், எத்தனை காவலர்கள், ஆர்டர்லியாக பணியாற்றுகின்றனர் என்று பதில் அளிக்குமாறு டிஜிபி கேட்டிருக்கிறார்.
அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகளில் அமர்த்தப்படுவது போல் காவல் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டில் அலுவலக உதவியாளர்கள், வேலை ஆட்களை பொதுப்பணித் துறையிலிருந்து ஏன் அமர்த்தவில்லை? என்றும் வினவியிருக்கிறார்.
இவை தவிர மேலும் சில தகவல்களை எண்ணிக்கையாக அளிக்கும்படி டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார். அதில், கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறை பணியிலிருந்து, சொல்லாமல் வேலையைவிட்டு ஓடியவர்கள் எத்தனை பேர்? என்றும், கடைசி 10 ஆண்டுகளில் பணியிலிருந்து எத்தனை காவலர்கள் நீக்கப்பட்டுள்ளனர்? கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட போலீஸார் எத்தனை பேர்? என்றும், கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் பணியிலிருந்தபோது மரணம் அடைந்த காவல்துறையினர் எத்தனை பேர்? என்றும், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வினவியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.