காலா படத்துக்கு தணிக்கை சான்று எப்போது வழங்கப்பட்டது ? 4 மணிக்குள் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் ! சென்னை உயர் நீதிமன்றம்
காலா படத்துக்கு தணிக்கை சான்று எப்போது வழங்கப்பட்டது என்பதை 4 மணிக்குள் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என்று காலா படத்துக்கு தடை கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலா படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நாடார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கில் காலா படத்தில் திரவியம் நாடார், நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தவறான கருத்துகளை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ரமேஷ் நாடார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் காலா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் தடை கோருவது ஏன்? காலா படம் நாளை வெளியாகவுள்ளதாக கடந்த 10 நாட்களாகவே விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்று காலா படத்துக்கு தடை கோரும் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரஜினி நடித்துள்ள காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை எனக்கூறி ராஜசேகரன் மனுவை தள்ளுபடி செய்தது.காலாவுக்கு தடைகோரி ராஜசேகரன் தொடர்ந்த மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.