காலல் உதைத்த திமுக கவுன்சிலர்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை …!
பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.
இதனையடுத்து காலால் பெண்ணை உதைத்த கவுன்சிலரை திமுக தலைமை கழகம் நீக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியது,கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள் – விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது.தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.