காலம் தாழ்த்தாமல் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும்!ஜி.கே.வாசன்

Default Image

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஊதிய உயர்வை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெலியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வங்கி நிர்வாகம் செவி சாய்த்து அதனை நிறைவேற்ற முன்வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் வங்கி ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

குறிப்பாக வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு ஏற்பட்டால் தான் வங்கி ஊழியர்கள் பயன் அடைவார்கள், வங்கிப் பணிகளுக்கும் தடை ஏற்படாது, வங்கியின் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை வங்கி நிர்வாகமும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

நம் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு சம்பந்தமாக ஏற்பட்ட ஒப்பந்தம் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்த நிலையில் அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டே நவம்பர் மாதம் முதல் புதிய ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் வங்கி நிர்வாகங்கள் தான். இருப்பினும் வங்கி ஊழியர்கள் வங்கி நிர்வாகங்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதெல்லாம் விரைவில் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள்.

மேலும் வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அரசும் ஏற்கெனவே உறுதி அளித்திருந்தது. ஆனால் வங்கி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு இன்னும் சுமுகத் தீர்வு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அது மட்டுமல்ல வங்கிகளுக்கு இன்னும் வாராக்கடன் அதிக அளவில் உள்ளதால் வங்கி ஊழியர்களுக்கு மிகவும் குறைவாக 2 சதவீத அளவிற்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் முடிவு செய்தது.

வங்கிகளுக்கு வாராக்கடன் இருப்பதற்கு யார் காரணம், அப்படியே வாராக்கடன் இருந்தாலும் அதனை வசூல் செய்ய வேண்டிய உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமே தவிர, வாராக்கடனை காரணம் காட்டி புதிய ஊதிய உயர்வு வழங்குவதில் காலம் தாழ்த்தவோ, குறைவான ஊதிய உயர்வு வழங்கவோ முயற்சிக்கக் கூடாது. வங்கி நிர்வாகங்கள் வாராக்கடனை வசூல் செய்ய முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரு முதலாளிகள், தொழிலதிபர்கள் போன்ற பணக்காரர்களிடம் இருந்து வாராக்கடனாக உள்ள பணத்தை வசூல் செய்ய கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

அதனை விட்டுவிட்டு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை வங்கி நிர்வாகங்கள் இன்னும் வழங்காமல் அவர்களுக்கு பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. இச்சூழலில்தான் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் தங்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் வரும் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

எச்சூழலிலும் வங்கி ஊழியர்களும் பாதிக்கப்படக்கூடாது, வங்கிப்பணியும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதுதொடர்பாக இன்றைக்கு வங்கி ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் வங்கி நிர்வாகங்கள் நடத்த இருக்கின்ற பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டும். மேலும் மத்திய நிதி அமைச்சகமும், மத்திய அரசும் – வங்கி நிர்வாகங்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட வழி வகுத்து கொடுக்க வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்